ASORT is Scam or Legit?
அசார்ட் ஏமாற்று வேலையா அல்லது நல்ல வேலையா?
ASORT is scam or not |
"வா மச்சா, எங்க கம்பெனில மாசம் 18000 சம்பளம் தர்றாங்க... துணிய அப்டி ஒரு இழு, இப்டி ஒரு இழு-னு இழுத்து பாத்து குவாலிட்டி செக் பண்ணி அனுப்புற Garment Work தான்டா... சட்ட மடிப்பு கசங்காம வேலைக்கு போய்ட்டு வந்துரலாம்... General Shift மட்டும் தான்... Permanent work டா... ஜாலியா இருக்கலாம் மாப்ள வாடா!..." என அன்போடு அழைக்கும் நண்பன், தன்னை ASORT என்னும் Company க்கு தாரை வார்க்கப்போவதை உணராமல் சென்றான் அவன்!... இது வரை படித்து விட்டு ஏதோ வாழ்க்கை கதை என்று நினைத்துவிடாதீர்கள்... Intro குடுத்து ஆரம்பிக்கிற அளவுக்கு இந்த ASORT கம்பெனி worth இல்ல... அதான் இப்படி ஒரு Introduction 😅...
ASORT - படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் பலருக்கும் இந்த நிறுவனம் பரிட்சயமானதாக இருக்கலாம். பரிட்சயமில்லாதவர்தள் இந்த நிறுவனத்தை பற்றி அறிந்து கொள்ள தான் இந்த பதிவு! ASORT என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது? ASORT ஒரு Scam-ஆ அல்லது ஒரு நல்ல வருமான வழியா? என்பது பற்றியெல்லாம் சுருக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்...
What is ASORT?
அசார்ட் என்றால் என்ன?
ASORT is scam or not |
ASORT என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்காக முதலில் ஒரு சிறு விளக்கம்... 'வழக்கமாக ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால், முதலில் அவன் ஆசையை தூண்ட வேண்டும்' என்ற அடிப்படையில் இயங்கும் ஒரு MLM (Multi Level Marketing) நிறுவனம் தான் இது. MLM பற்றி விளக்க வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன்... இதுவும் வழக்கமான ஒரு MLM நிறுவனம் தானே! என்று கேட்டால் அது தான் இல்லை... ASORT ன் Concept-யே வேற மாதிரி... இந்த பதிவை முழுவதுமாக படித்து முடிக்கும் போது நம்ம ஊர்ல இப்டியும் கூட நடக்கிறதா? என்று உங்களை ஒரு கணம் நினைக்கவைக்கும் அளவுக்கு இருக்கும் இந்த நிறுவனம்!...
Dynamic Beneficial Accord Marketing Private limited (DBA)
ASORT is scam or not |
ASORT என்பது Dynamic Beneficial Accord Marketing Private Limited (DBA) என்ற நிறுவனத்தால் நடத்தப்படும் இந்தியாவின் முதல் Co-Commerce Website (கூட்டு வர்த்தகம்) ஆகும். இந்த DBA நிறுவனம் இன்னும் பல சிறு நிறுவனங்களை கூட வைத்துள்ளது. ASORT பற்றி பார்ப்பதற்கு முன்பாக அதன் தலைமை நிறுவனமான Dynamic Beneficial Accord Marketing Private limited நிறுவனத்தை பற்றி நாம் பார்க்க வேண்டும்.
பஞ்சாபின் மொகாலியை தலைமை நிறுவனமாக கொண்டு Deepak Parashar என்பவரால் 22 செப்டம்பர் 2011 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் தான் இந்த DBA. வழக்கம் போல இதுவும் ஒரு வடக்கிந்திய கம்பெனி தான். Deepak Parashar இந்நிறுவனத்தின் Business Owner ஆகவும் Nathasha, Roshan Singh Bisht, Beena Davi Bisht, Ambrish Ranjan ஆகியோர் இந்நிறுவனத்தின் Directors ஆகவும் உள்ளனர்.
ASORT's Consultancy Centers
அசார்ட்டின் ஆள் பிடிக்கும் மையங்கள்
ASORT is scam or not |
சரி, இனி ASORT ன் திட்டம் பற்றி பார்க்கலாம்... மற்ற MLM நிறுவனங்கள் 'இதுதான் வேலை' என்றும் 'work from home' என்றும் கூறி தான் அழைக்கிறார்கள். ஆனால் இந்நிறுவனம் அப்படி செய்வதில்லை. ASORT என்ற பெயரில் இந்நிறுவனம் யாரையும் வேலைக்கு அழைப்பதில்லை. ஏனென்றால் இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பலரும் இந்நிறுவனத்தை பற்றி சமூக வலைதளங்களில் கிழி கிழியென கிழித்து தொங்கவிட்டிருப்பார்கள்.
தாங்கள் வேலைக்கு அழைப்பவர்கள் கொஞ்சம் அறிவுள்ளவர்களாக இருந்தால், சமூக வலைதளங்களில் தேடிப் பார்த்து அப்போவே பல்டி அடிப்பார்கள் என்பதை உணர்ந்து IFCC (Independent Fashion Conslant Centre), ACH (Asort Co-commerce Hub), G.A Pvt.Ltd போன்ற பல பெயர்களில் பதிவு செய்யப்படாத மற்றும் பதிவு செய்யப்பட்ட Consulting நிறுவனங்களை உருவாக்கி, தங்கள் நிறுவனத்துக்கு தாங்கள் உருவாக்கிய Consulting நிறுவனங்களின் பெயரால் ஆள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது உங்களை ஆசை வார்த்தை கூறி அழைக்கும் நண்பன் கூறும் இந்த பதிவு செய்யப்படாத Consulting நிறுவனங்களின் பெயரை நீங்கள் எங்கு போய் தேடினாலும் ஒரு துரும்பும் தட்டாது. நண்பனின் ஆசை வார்த்தையை நம்பிப் போய் அந்நிறுவனத்தில் சேர்ந்த பின் தான் உங்களுக்கே கதை புரியவரும்.
இந்த ஆள் பிடிக்கும் நிறுவனங்களுக்கு 4 தூண்கள் உள்ளனவாம். Training & Consulting, Branding & Standardization, Compliance Support, Fast Care ஆகியவை தான் அந்த 4 தூண்களாம்!...
How ASORT Cheat Us?
அசார்ட் எப்படி நம்மை முட்டாளாக்குகிறது?
ASORT is scam or not |
இப்போது இந்த நிறுவனங்களில் என்ன நடக்கிறது? நாம் எப்படி ஏமாற்றப்படுகிறோம்? என்பதையெல்லாம் பார்க்கலாம். 18000 சம்பளம், கார்மென்ட் வொர்க், ஜெனரல் ஷிஃப்ட் போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி நீங்கள் சென்றவுடன் சாப்பாடு மற்றும் தங்கும் அறைக்காக 2000 ரூபாயை புடுங்கி விடுவார்கள். அதன் பின் Training Class என்ற பெயரில் காலை முதல் மாலை வரை ஒரு 3 நாள் வகுப்புகளை நீங்கள் attend செய்ய வேண்டியிருக்கும்.
3 Days Training Class Rothanaigal...
முதலில் இந்த 3 நாள் வகுப்புகளை பற்றிப் பார்க்கலாம். இந்த வகுப்புகளில் தான் நீங்கள் ASORT என்ற பெயரையே கேள்விப்படுவீர்கள். இந்த வகுப்புகளில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் நண்பனை எப்படி பொய் சொல்லி வரவழைக்க வேண்டும்? பிறரை எப்படி மண்டை கழுவ வேண்டும்? போன்ற முக்கியமான விஷயங்கள் உங்களுக்கு சொல்லித் தரப்படும்.
வழக்கமாக MLM நிறுவனங்கள் கூறும் உருட்டுகளான, '2030ல் இந்தியாவில் நாம் செய்யும் business தான் உயர்மட்டத்திலிருக்கும்... நீங்களும் இன்று முதல் ஒரு business man தான்' போன்றவற்றையும் நன்றாக உருட்டி விடுவார்கள்.
ASORT is scam or not |
நான்காவது நாள் Interview என்ற பெயரில் நடக்கும் கூத்து தான் முக்கியமான விஷயமே! அதை கடைசியாக பார்க்கலாம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்த மூன்று நாட்களும் நீங்கள் ஒரு மண்டை கழுவும் அறைக்குள் இருப்பீர்கள். பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது... கையை டேபிள் மீது வைக்கக் கூடாது... போன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நீங்கள் வெற்றிகரமாக இந்த 3 நாள் வகுப்புகளை கடந்து, நான்காவது நாள் நேர்காணலுக்கு சென்றால் நீங்கள் ASORT ஆல் 99.9% மண்டை கழுவப்பட்ட மனிதராக மாறியிருப்பீர்கள்.
ASORT's Room Rothanaigal...
ASORT is scam or not |
அடுத்ததாக இந்த Consulting Centre களால் வழங்கப்படும் அறைகளில் நடக்கும் விஷயங்களை பார்க்கலாம். வழக்கமாக MLM நிறுவனங்கள் ஏதாவது ஒரு திருமண மண்டபத்திலோ ஹோட்டலிலோ அறை எடுத்து கூட்டங்களை நடத்தி அனுப்பி விடுவார்கள். ஆனால் ASORT ன் வழிமுறையே வேறு... 'நிரந்தர பணி' என இளைஞர்களை வரவழைத்து, அவர்களை ஒரே இடத்திலேயே அடைத்து வைத்து மண்டையை கழுவி கழுவி ஆட்களை சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
தங்கள் நிறுவனங்களுக்கு அருகிலிருக்கும் பல அறைகளை இவர்களே வாடைகைக்கு எடுத்து விட்டு, அதனை வேலைக்காக வரும் இளைஞர்களுக்கு வாடைகைக்கு விடுகிறார்கள். அதற்கு 2000 ரூபாய் காசும் வாங்குகிறார்கள். 1000 ரூபாய் அறை வாடகை எனவும் 600 ரூபாய் form கு எனவும் மீதி 400 ரூபாய் சாப்பாட்டு செலவு என்றும் கூறுவார்கள். சாப்பாடு என்றால் தரம் குறைந்த அரிசியும் தண்ணியா? குழம்பா? என சந்தேகப்படும் அளவுக்கு ஒரு குழம்பும் தான் கொடுப்பார்கள். அதுவும் காலை, மாலை இருவேளை மட்டும் தான்...
நாம் form கு எனக் கொடுக்கும் 600 ரூபாயில் ஒரு பகுதி நம்மை சேர்த்துவிட்டவருக்கு வழங்கப்படுமாம். எதற்காகவென்றால், 'நாம் எந்த மனநிலையில் இருக்கிறோம்?' என மேல் நிலையில் இருப்பவர்களிடம் தொடர்ந்து report செய்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் நாம் காசு கட்டி ASORT Member ஆகும் வரை நம் கூடவே இருக்க வேண்டியும் தான்.
ASORT is scam or not |
இந்த 3 நாள் வகுப்புகளின் போது மொபைல் பயன்படுத்த அனுமதி கிடையாது. நம்மை சேர்த்து விட்ட நபர் தவிர வேறு யாரிடமும் நெருங்கிப் பழக கூடாது... அறையிலும் அலுவலகத்திலும் ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைக்கக்கூடாதாம்... 'Senior' என்றே அழைக்க வேண்டுமாம். 3 நாள் வகுப்புகளில் சொல்லிக் கொடுப்பவற்றை தினமும் அறைக்கு வந்து எழுதி எழுதி பார்க்க வேண்டுமாம்... செத்தா கூட அவங்க சொல்லித்தரது மறக்காது போலயே😂... Homework வேற தனியாக இருக்கிறதாம்!
ASORT is scam or not |
கம்பெனியில் நடக்கும் வகுப்புகள் போக அறையிலும் இரவு நேர கூட்டங்கள்... டீ குடிக்க போக வேண்டும் என்றால் கூட அனுமதி வாங்க வேண்டுமாம்... கக்கூஸ் போகக் கூட அனுமதி வாங்க வேண்டுமாம்... அறையில் வேட்டி அணியக்கூடாது... போதைப் பொருட்களுக்கு அனுமதி இல்லை... நமது சீனியரின் துணிகளை துவைத்து போட வேண்டும்... என கட்டுப்பாடுகள் ஏராளம்! இதெல்லாம் எதுக்கு என்று கேட்டால் 'Attitude கு என்று தனி மதிப்பெண்கள் இருக்கு' என கூறுகிறார்கள்.
அறையிலிருந்து நாம் யாருக்கெல்லாம் போன் செய்கிறோம்? அவர்களிடம் நாம் என்னென்ன பேச வேண்டும்? என்பதையெல்லாம் நம்மை சேர்த்து விட்ட நபரின் ஆணைக்கிணங்கியே நாம் செய்யவேண்டுமாம்! சரியாக சொன்னால் நாம் யாரிடம் என்னென்ன பேச வேண்டும்? என்பதை இன்னொருவர் முடிவெடுப்பார். இதெல்லாம் உண்மையிலேயே நடக்குதா? என்று கேட்டால்... இன்னும் முடியவில்லை இருக்கிறது!
உண்மையில் ASORT உங்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை பறித்து, உங்களை யோசிக்க விடாமல் செய்து எப்படியாவது 40000 ரூபாயை வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். 40000 ரூபாய் கட்டிய பிறகு உங்களை ஒரு பொருட்டாக கூட அவர்கள் கருத மாட்டார்கள்.
How I Earn Money In ASORT?
அசார்ட்டில் எப்படி பணம் சம்பாதிக்கலாம்?
ASORT Steps |
எல்லாம் சொல்லியாச்சி!... இதுல இப்டியெல்லாம் காசு சம்பாதிக்கலாம்? என்று ASORT ஒரு கதை கூறுமே... அதைப் பார்க்கலாம்! Multi Level Marketing ல் Matrix System என்னும் அடிப்படையில் தான் இந்நிறுவனம் இயங்குகிறது. இந்த Matrix System பற்றி மற்றொரு பதிவில் தெளிவாகப் பார்க்கலாம். நமக்கு மேலிருப்பவர்கள் நமது upline... கீழிருப்பவர்கள் downline. இதில் ஒரு 8 நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலைக்கும் வருமானம் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.
முதல் நிலை Customer... அதாவது ASORT ல் பொருள் வாங்கும் ஒவ்வொருவரும் இந்த முதல் நிலையை சேர்ந்தவர்கள். சொல்ல மறந்து விட்டேன்... ASORT ஒரு direct selling website. இதற்கான செயலி கூகுள் பிளே ஸ்டோரிலும் இருக்கிறது. Direct Selling என்றால் உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக வாங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது. இந்த முதல் நிலையில் பொருள் வாங்கலாமே தவிர எவ்வித வருமானத்தையும் ஈட்ட முடியாது.
ASORT Shopping App |
இரண்டாவது நிலை Ambassador. இந்நிலையில் தான் நாம் ASORT ல் உறுப்பினராக இணைகிறோம். இது முற்றிலும் இலவசமான ஒரு செயல்முறைதான். இதனால் தான் என்னவோ ASORT இந்நிலையை ஊக்குவிப்பதில்லை... ஆனால் இந்நிலையிலிருந்தே நீங்கள் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம் எனவும் கூறுகிறார்கள்.
மூன்றாவது நிலை Promoter. இந்நிலையை அடைய நாம் 8000 ரூபாய் கொடுத்து ASORT நிறுவனத்திடமிருந்து துணிகளை வாங்க வேண்டுமாம். இந்த துணிகளின் கதையை அடுத்த தலைப்பில் பார்க்கலாம். நீங்கள் 8000 ரூபாயை ASORT டம் இழந்த உடனேயே நீங்கள் இந்த நிலையை அடைந்திருப்பீர்கள்.
நான்காவது நிலை தான் Maven. நீங்கள் 40000 ரூபாய் கொடுத்து நிறுவனத்திடமிருந்து துணிகளை வாங்கி விற்றால் இந்நிலையை நீங்கள் அடையலாம். இந்த 40000 ரூபாயை வாங்குவதற்கு முன்பாக Video Verification என்றொரு பகுதி இருக்கிறது. அதாவது 'நான் என்னுடைய சுய நினைவோடு தான் இந்த பணத்தை கட்டுகிறேன்' என ஒரு நீண்ட paragraph யை நீங்களே படித்துக்காட்ட, அதை அவர்கள் Record செய்து வைத்திருப்பார்கள்.
ASORT is scam or not |
'இந்த செயல்முறை எதற்காக?' என்று கேட்டால், வேற எதுக்கு... 40000 ரூபாய் இழந்துட்டேன் எனக் கூறி போலீஸில் புகார் கொடுக்க முடியாதில்லையா?... 😂
இந்த 40000 ரூபாயை வீட்டிலிருந்து எப்படியெல்லாம் கூறி வாங்க வேண்டும்? என்பதற்கான வழிமுறையையும் அவர்களே சொல்லித் தராங்களாம்! Course படிக்குறேன்னு சொல்லி வாங்கு... அத சொல்லி வாங்கு... இத சொல்லி வாங்கு என ஐடியாக்களை வாரி வழங்குவார்களாம்.
இது மட்டுமில்லாமல் அந்த காசை வாங்க 'நாம் வீட்டில் பேச வேண்டும்' என்ற தேவையே இருக்காதாம்! அந்நிறுவனத்திலுள்ள மண்டை கழுவுவதில் திறமையான ஒரு நபர், அந்த அப்பாவியான பெற்றோரை 'நீங்கள் கஷ்டப்பட்டு இந்த காசை கட்டினால் உங்கள் மகன் இலட்சாதிபதியாக வெளியே வருவான்' என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி காசை வாங்கி விடுகிறார்கள்.
ASORT is scam or not |
அடுத்து ஐந்தாவதாக உள்ள நிலை தான் Influencer. இந்நிலையை நீங்கள் அடைய வேண்டும் என்றால் குறைந்தது 3 பேரையாவது Maven ஆக மாற்றியிருக்க வேண்டும். சரியாக சொன்னால் குறைந்தது 3 குடும்பங்களையாவது கலக்கி 40000 ரூபாயை புடுங்கி ASORT கு அளித்திருக்க வேண்டும்.
ஆறாவதாக உள்ள அடுத்த நிலை ASORT Community Entrepreneur (ACE). இந்நிலையை அடைய நாம் குறைந்தது ஒரு 5 Influencer களையாவது உருவாக்கியிருக்க வேண்டும். அடுத்த நிலை ASORT Business Owner (ABO). இதுவும் அதே கதை தான் 5 ACE களை உருவாக்க வேண்டும். அடுத்த நிலை Veteran ABO. எல்லாருக்கும் மேலாக கம்பெனி ஓனர். இதுதான் ASORT ன் Pyramid Scheme. இந்த ஒவ்வொரு நிலைக்கும் இன்னும் சில நிபந்தனைகளும் கூட உள்ளன. தெளிவாக பார்க்கும் அளவுக்கு அதொன்றும் அவ்வளவு முக்கியமானவையில்லை! 😂
ASORT is Scam or Not?
இனி நம்ம கதைக்கு வருவோம். ASORT ஒரு Scam ஆ இல்லையா? பலரும், 'நான் இந்நிறுவனத்தில் இணைந்து இத்தனை இலட்சம் சம்பாதிக்கிறேன்' என்றெல்லாம் கூறுகிறார்கள். முதலில் அவர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள்? என நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
MLM and Ponzi Scheme
Multi level marketing |
இவ்விடத்தில் தான் உள்ளே நுழைகிறது MLM. ஒருவர், அவருக்கு கீழே மூவர், அவர்களுக்கு கீழே 9 பேர், அவர்களுக்குமஅ கீழே 27 பேர் என சங்கிலித் தொடர் போல இணைத்து ஒரு பிரமிட் அமைப்பை உருவாக்கி, மதிப்பேயில்லா பொருட்களை அதிக விலைக்கு ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு விற்று, அதிலிருந்து கிடைக்கும் commission மூலமாக சம்பாதிப்பதாக நம்ப வைக்கப்படும் ஒரு தொழில்நுட்பம் தான் Multi Level Marketing.
ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் இந்த சங்கிலித் தொடர் முடிவடையும். அன்று இந்த நிறுவனங்கள் கண்டிப்பாக கடையை சாத்திவிட்டு ஓடித்தான் ஆக வேண்டும். இம்முறையில் சங்கிலித் தொடரின் உயரத்தில் இருப்பவர்கள் சம்பாதித்துக் கொண்டே இருக்கலாம். கீழே இருப்பவர்கள் கடைசி வரை ஆள் சேர்த்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். இது தான் MLM.
Ponzi Scheme |
MLM பற்றி பார்க்கும் போது அதன் முன்னோடியான Ponzi Scheme பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும். இத்தாலியை சேர்ந்த Charles Ponzi என்பவர் பல ஆட்களை ஒருவர் பின் ஒருவராக இணைத்து சங்கிலித் தொடர் போல உருவாக்கி, ஒருவர் பணத்தை மற்றவருக்கு சங்கிலித்தொடரின் கீழிருந்து மேலாக பிரித்து கொடுத்து ஆள் சேர்த்து பணம் சம்பாதிக்கும் ஒரு புதிய Business முறையை உருவாக்கினார்.
Charles Ponzi |
ஒரு கட்டத்தில் இந்த சங்கிலித் தொடர் முடிவடையவே கீழிருந்தவர்கள் நாக்கு வழித்துக் கொண்டு செல்ல வேண்டியதாயிற்று... இம்முறை இந்தியாவில் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
இதே முறையை தான், வெறும் பணத்தை மட்டும் வாங்குவதற்கு பதிலாக பணத்துக்கு பதில் ஒரு பொருளையும் கொடுத்து direct selling எனக் கூறி MLM என பெயர் மாற்றி வைத்திருக்கிறார்கள். இப்போது இம்முறை GST க்குள் வருவதால் இந்தியாவில் இன்னும் அங்கீகரிக்கப்பட்ட முறையாகவே உள்ளது.
ASORT's Brands and Suppliers
இதனடிப்படையில் ASORT ல் நாம் வாங்கும் (அ) விற்கும் பொருட்களுக்கு commission என்ற பெயரில் Asort Points (AP) களாக நமக்கு வழங்கப்படுகிறது. 2 AP கள் ஒரு ரூபாயாக மதிக்கப்படுகிறது. மாதம் இரு சுழற்சிகள் என்ற முறையில், 3ம் தேதி 15ம் தேதி என இரு முறை சம்பளம் என்ற பெயரில் ஒரு பணம் நமக்கு வருகிறது. Commission மட்டுமில்லாமல் Group Bonus, Group Profit, Group Fund, Generation Profit என பல முறைகளில் நமக்கு வருமானம் வருமாம்!
Brands of ASORT |
அடுத்தாக இவர்கள் செய்யும் துணி விற்கும் Business பற்றி பார்க்கலாம். ABG, Earthy Scent, Mr.Huffman, IFA Zone, KUE FIT, Solasta, Amiiga போன்ற பெயர் தெரியா Brand களை Luxury Brands என கூறி விற்கிறார்கள். ஒவ்வொரு சட்டைக்கும் 2000, 2500 என்று தான் விலையையும் நிர்ணயித்திருக்கிறார்கள். இதுல Twist என்னன்னா இந்த எல்லா brand களுக்கும் ஓனர் யார் என்று பார்த்தால்... Dynamic Beneficial Accord Marketing Private limited எனத் தான் வருகிறது 😂...
இந்த மாதிரி நிறுவனங்கள் விற்கத் கூடிய எல்லா பொருட்களும் இவர்களின் வலைதளங்களை தவிர வேறு எங்கும் கிடைப்பதில்லை... அது ஏன் என உங்களுக்கே புரிந்திருக்கும்! இது மட்டுமில்லாமல் ASORT செயலியில் கூறப்பட்டிருக்கும் NR Ventures போன்ற இவர்களின் Supplier நிறுவனங்கள் பலவற்றின் ஓனராக இவர்களே தான் இருக்கிறார்கள். உண்மையிலேயே அந்த '2500 ரூபாய் துணிகள் 100 ரூபாய்க்கு கூட தேராது' என்பதை அந்த துணிகளை வாங்கியவர்களே உணர்ந்திருப்பார்கள்... 😂
NR Ventures |
'I am proud to be an ASORTIAN... உங்களுக்கு பொறாமை... பிஸினஸ் பண்ண உங்களுக்கு தெரியலன்னா நாங்க என்ன பண்ண முடியும்? உங்களுக்கு survey பண்ண தெரியல...' என கூறுபவர்கள் business என்றால் என்ன? என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். Supplier, Employer, Customers என மூவரும் இருந்தால் தான் அது Business. ஆனால் இங்கு Supplier ம் நீங்க தான்... Employer ம் நீங்க தான்... அந்த பொருட்களை யார்ட்ட விக்குறீங்க? உங்க கீழே சேருறவங்க கிட்ட தான!... அப்போ Customer ம் நீங்க தான் என்றால் இது எப்படி Business ஆகும்? Supplier, Employer, Customer என மூன்றுமே ASORT தான்... இது பிஸினஸ் இல்ல MLM.
அவங்க தான் ஆப் வெச்சிருக்காங்களே... அதன் மூலமா வெளில sale பண்ணலாமே! என்று கூறுபவர்கள் அந்த செயலியை பயன்படுத்திப் பார்த்தால் உங்களுக்கே புரியும்!... முழுக்க முழுக்க ஆள் சேர்த்து அதனை manage செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயலி தான் அது!...
'உங்களுக்கெல்லாம் பொறாமை... இது உண்மையில்லை என்றால் நான் எப்படி மாதாமாதம் இவ்வளவு சம்பாதிக்கிறேன்? பணம் சம்பாதிக்க இந்த பிஸினஸ் ஒரு சிறந்த வழி' என கூறுபவர்களுக்கு ஒரே ஒரு பதில் தான். பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழி இது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு காசும் "ஒரு ஏழைத் தாயின் நகையை அடகு வைத்து வட்டிக்கு வாங்கப்பட்ட காசு" என்பதை நீங்களும் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். அப்படி ஒரு எச்சக் காசு தேவை தானா?
கிட்டத்தட்ட 13 வருடங்களா இந்த நிறுவனம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு!... என்று கூறுபவர்கள் Amway போன்ற நிறுவனங்களின் கதையை படித்துவிட்டு இங்கு வந்திருக்க வேண்டும்.
Be Aware from These Type of Companies!
இந்நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்!
சரி... இப்ப நீங்க நல்லா சம்பாதிக்குறீங்க... இப்ப இல்லாவிட்டாலும் ஒரு பத்து வருடம் கழித்து சங்கிலித் தொடர் இதற்கு மேல் வளர முடியாது என ASORT உணர்ந்து கம்பி நீட்டி விட்டார்கள் என வைத்துக்கொள்ளுங்கள்... அன்று உங்களுக்கு 30 வயது, எவ்வித skills ம் certificate ம் இல்லாமல் அடுத்து நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களை நம்பி ஏமாந்தவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?... இந்தியாவில் அப்படி எல்லாம் கம்பி நீட்ட முடியாது என்பவர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களை பற்றி அறிந்திருக்க வேண்டும்...
'இது தான் வேலை' என்று கூறி கூப்பிடுங்கள்... அவர்களுக்கும் பிடித்திருந்தால் யார் வேண்டுமானாலும் தாராளமாக இந்த வேலையை செய்யலாம்... எதற்கு பொய் சொல்லி கூட்டிட்டு போய் ஏமாத்தணும்? இந்த ASORT நிறுவனம் பெரும்பாலும் உள்ளூரில் ஆள் எடுப்பது கிடையாதாம்! தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் அமைந்துள்ள கிராமப்புற வேலை தேடும் இளைஞர்கள் தான் இவர்களின் இலக்கு.
Freshers தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இந்த மாதிரியான நிறுவனங்களின் வலையில் அதிகமாகப் போய் விழுவது தான் வருத்தமாக உள்ளது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஓசூர் போன்ற பல முக்கியமான பகுதிகளில் இவர்களின் பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன.
ASORT எந்தவித வேலை வாய்ப்பையும் வழங்குவதில்லை... அது ஒரு Freelancing work தான் என ASORT கூறுகிறது. ஆனால் இந்த Consultancy Centres 'நிரந்தர வேலை' என கூறி ஆள் சேர்ப்பதே ஒரு ஏமாற்று வேலை தான். அப்படி என்னத்தான் அந்த நிறுவனங்களில் வேலை இருக்கும்? என்று கேட்டால் Class மேல Class தான்... Bridge class, அந்த கிளாஸ், இந்த கிளாஸ் என வகுப்புகள் மூலம் non-stop மண்டை கழுவுதல் தான்...
தமிழ்நாட்டில் இதுவரை பெண்களை இந்த வேலைக்கு எடுக்காவிட்டாலும் கூட, எதிர்காலத்தில் பெண்களும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. வேலை தேடும் இளைஞர்கள் தாங்கள் எங்கு வேலைக்கு போகிறோம்? என்பதை நன்றாக அறிந்து அவர்களுக்கான துறையை தேர்ந்தெடுத்தால் சற்று சிறப்பாக இருக்கும்.
நாமே காசு இல்லாமல் தான் வேலைக்கு செல்கிறோம். நம்மட்டயே வந்து 'முதலில் காசு கட்டு அப்புறம் தான் வேல' என்றால் கொஞ்சம் உஷாராகி விட வேண்டும். கஷ்டப்படாம வேல பாக்கலாம்... உக்காந்த இடத்துல இருந்தே இலட்சங்கள் சம்பாதிக்கலாம் என்றால் திரும்பி பாக்காம ஓடி விடுங்கள் என்பது தான் எனது கருத்து!
கடைசியா என்னத்தான் சொல்ல வர்ற? ASORT Company Scam ஆ... இல்லையா? என்று கேட்டால்... இது வரை படித்த உங்களின் மனசாட்சியிடமே அதற்கான பதிலை நான் விட்டுவிடுகிறேன். 'யார் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன? நான் சம்பாதித்தால் போதும்' என இருப்பவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கேற்ற துறை தான் இது... இங்கு ஏமாற்றுவது ASORT மட்டுமல்ல... தன்னை நம்பிய நண்பனையும் பொய் சொல்லி வரவழைத்து, இந்த குழியில் தள்ளி விட்டு 'தான் கரையேறினால் போதும்' என்றிருக்கும் சில துரோகிகள் தான் உண்மையான ஏமாற்று காரர்கள்...
நன்றி!...